தமிழகத்தில் கடந்த 2018-ல் நடந்த கார் விபத்துகளில் பலியானவர்களில் 78% பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என மத்திய அரசின் சாலை விபத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 24,671 பேர் கார் விபத்தில் சிக்கினர். அவர்களில் 22,603 பேர் காயங்களுடன் தப்பினர். அவ்வாறாகக் காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களில் 12,548 பேர் சீட் பெல்ட் அணிந்திருந்தனர்.
அதே வேளையில் தமிழகத்தில் கார் விபத்தில் உயிரிழந்த 2068 பேர்களில் 1614 பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள்.
சீட் பெல்ட் அணிவது தொடர்பாக தமிழக மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
அதேபோல் காரில் பயணிக்கும்போது குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக இருக்கைகளைப் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
இன்னும் சில தகவல்கள்:
கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான இந்த அறிக்கையில் 2018-ல் இந்தியாவில் சாலை விபத்து அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 0.46% அதிகரித்துள்ளது.
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2018-ல் மொத்தமாக 4,67,044 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 1,51,417 பேர் உயிரிழந்துள்ளனர். 4,69,418 காயமடைந்தனர். 64.4% சாலை விபத்து மரணங்களுக்கு அதிவேக வாகன இயக்கமே காரணமாக இருந்திருக்கிறது.