க்ரைம்

காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை காதலனுடன் இணைந்து கொலை செய்த பள்ளி மாணவி கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைகிராமத்தில் தன்னுடன் படிக்கும் மாணவனுடன் சேர்ந்து பெண்ணைக் கொன்ற வழக்கில் 11-ம் வகுப்பு மாணவியை கைது செய்த போலீஸார் அவரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மாணவனை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழமலைப்பகுதி தாண்டிக்குடியை சேர்ந்த கேசவன் மனைவி சுந்தரி(31). இவர், குடும்பத்தகராறு காரணமாக கணவரைவிட்டு அதே ஊரைச்சேர்ந்த முருகானந்தம் என்பவருடன் வசித்துவருகிறார்.

முருகானந்தம் சென்னையில் வேலைபார்த்துவரும் நிலையில் தற்போது முருகானந்தம் வீட்டில் சுந்தரி மட்டுமே தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (22-ம் தேதி) மர்மமானமுறையில் சுந்தரி வீட்டில் இறந்துகிடந்தார். அன்று வீட்டில் 11 ம் வகுப்பு படிக்கும் 16 வயது நிரம்பிய முருகானந்தத்தின் சகோதரி மகள் தங்கியுள்ளார். இவர் கொடுத்த தகவலின் பேரில் தாண்டிக்குடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் மாணவி முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சுந்தரியை தன்னுடன் படிக்கும் மாணவனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "நானும், என்னுடன் படிக்கும் மாணவனும் காதலித்துவந்தோம். அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம்.

முருகானந்தத்தின் வீட்டு மாடியில் நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது, சுந்தரி எங்களைப் பார்த்துவிட்டார். இருவரின் பெற்றோரிடமும் விஷயத்தைக் கூறப்போவதாக மிரட்டினார்.

இதனால் இருவரும் சேர்ந்து துணியால் கழுத்தை நெரித்து சுந்தரியை கொலை செய்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

மாணவியை கைது செய்த போலீஸார் மதுரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT