திருடப்பட்ட பைக்குகள் மற்றும் கைதான சுந்தர் 
க்ரைம்

மயிலாடுதுறையில் 15 மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து திருடிய இளைஞர் கைது

தாயு.செந்தில்குமார்

மயிலாடுதுறை பகுதியில் 15 மோட்டார் சைக்கிள்களைத் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அதிக குதிரைத் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போய் வந்தன. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் வாகனங்களைத் திருடிய நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மயிலாடுதுறையில் நேற்று (நவ.25) சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடித்தனர். அந்த நபர் மோட்டார் சைக்கிளைப் போட்டு விட்டு தப்பி ஓட முயன்றபோது, போலீஸார் விரட்டிச் சென்று அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர், சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் மெய்யான் தெருவைச் சேர்ந்த சுந்தர் (23) என்பது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில் சுந்தர் மோட்டார் சைக்கிள்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் மயிலாடுதுறை பகுதியில் 10 மோட்டார் சைக்கிள்களையும், செம்பனார்கோவிலில் 3, பெரம்பூரில் 2 ஆக மொத்தம் 15 மோட்டார் சைக்கிள்களைத் திருடியது தெரியவந்தது. சுந்தர் கொடுத்த தகவலின் பேரில் சித்தர்காட்டில் காவிரி ஆற்றுப்பாலம் தென்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. 15 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுந்தரைக் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT