விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழிலாளர்கள் 2 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
திருத்தங்கல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (33). லாரி ஷெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள்.
நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அர்ஜுனன் தனது மைத்துனர் சிவகாசி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த முருகன் (32) என்பவரை தொலைபேசியில் அழைத்து உள்ளார். பின்னர் அர்ஜுனனும் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் சிவகாசி கார்னேசன் ஜங்ஷன் அருகே வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் அர்ஜுனன் இன்று காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள லாரி ஷெட் அருகே முருகனும் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவலறிந்த சிவகாசி நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
கூலித் தொழிலாளர்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியில் ஒரே நேரத்தில் இரட்டைக் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.