தூத்துக்குடியில் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆசிரியர் தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்ததால் ஐஸ்வர்யா விபரீத முடிவு எடுத்ததாகக் கூறி பெற்றோர், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீஸார் அந்த கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூரணசெல்வி மருத்துவமனையில் துப்புரவு பணியாளாக வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (வயது 16) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஐஸ்வர்யா அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஐஸ்வர்யா பள்ளிக்கு செல்லாமல், இரண்டு நாள் விடுமுறை எடுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து பள்ளிக்கு வந்த ஐஸ்வர்யாவை, பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியர் திட்டியதாகத் தெரிகிறது. தொடர்ந்து ஐஸ்வர்யாவை தோப்புக்கரணம் இடச்சொல்லி தண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா தொடர்ந்து வருத்தத்தில் இருந்துள்ளார். குடும்பத்தினரிடம் தனக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து பெற்றோர் விசாரித்தபோது, மாணவ, மாணவிகள் முன்பு தோப்புக்கரணம் போட்டதால் மனமுடைந்த மாணவி மரிய ஐஸ்வர்யா தனது பெற்றோரிடம் விவரத்தை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியரிடம் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், மேலும், ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் தன் மீது புகார் தெரிவிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்றும் என்னை இந்த பள்ளியில் இருந்து யாரும் விரட்ட முடியாது என்றும் மாணவி மரிய ஐஸ்வர்யாவிடம் தெரிவித்து அவரை திட்டியதாகத் தெரிகிறது.
மேலும் மன அழுத்தத்துக்கு ஆளான ஐஸ்வர்யா பெற்றோர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யாவின் தம்பி, ஐஸ்வர்யா தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஐஸ்வர்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
ஐஸ்வர்யா இறந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ஐஸ்வர்யாவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.