ஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில்நகை திருட்டில் ஈடுபட்டதாக ஒடிசா காவலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் மகள் தர்ஷினி. இவர் கோட்டூர்புரம் போட் கிளப் சாலையில் உள்ள வீடு ஒன்றில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி இரவு தனது 6 பவுன் நகையை கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது செயின் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவர் சிவா மூலம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். முதல் கட்டமாக வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்துவந்த சந்தியா (24) என்பவரை விசாரித்தனர். அவருக்கும், நகை திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் அவரை போலீஸார் விடுவித்தனர்.
இதைத் தொடர்ந்து வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்த ஒடிசா மாநிலம், சுந்தராபோக்கரி துளட்டி பகுதியைச் சேர்ந்த ராஜிப் லிங்கா (25) என்பவரை விசாரித்தனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில், நகை திருட்டில் ஈடுபட்டது ராஜிப் லிங்கா என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவரைக்கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். ராஜிப்லிங்கா, தர்ஷினி வீட்டில் தொடர்ந்துநகை திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த தர்ஷினிதனது அறையில் தனிப்பட்ட முறையில்கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார். அதில், பதிவான காட்சிகள் மூலம் ராஜிப் லிங்கா பிடிபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.