க்ரைம்

செங்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை

செய்திப்பிரிவு

செங்குன்றத்தில் தாயின் கண் எதிரே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசலைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா(31). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செங்குன்றத்தில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் செங்குன்றம் சாலை மற்றும் பள்ளி சாலை சந்திப்பில் அன்சர் பாஷா ஆட்டோவில் தனது தாய் மெகபூபா (60), அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (38) ஆகியோருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 3 பேர், அன்சர் பாஷாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த ராஜமங்கலம் போலீஸார், அன்சர் பாஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கொலைக்கான காரணம்கொலை செய்யப்பட்ட அன்சர் பாஷாவுக்கு 9 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 8 வயதில் தயான் என்ற மகனும், 7 வயதில் முஷரத் என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து செங்குன்றத்தில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவருடன் அன்சருக்கு கூடாநட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த லட்சுமியின் மகன் பெரிய அஜீத், அன்சர் பாஷாவை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் பெரிய அஜீத்தை தாக்கி அவரது இடது காதை அன்சர் அறுத்துள்ளார்.

இதனால், கோபம் அடைந்த பெரிய அஜீத், தனது கூட்டாளிகளான சின்ன அஜீத், அஸ்வின் ஆகியோருடன் சேர்ந்து அன்சர் பாசாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT