கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்குக் கடத்திச் செல்லப்பட்ட 11 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தைப் பறிமுதல் செய்த போலீஸார் 2 பேரைக் கைது செய்தனர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு பெங்களூரு, கிருஷ்ணகிரி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (நவ.13) நள்ளிரவு முதல் மதுவிலக்கு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த உணவகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்ததில் லாரியில் எரிசாராயம் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளரைக் கைது செய்த போலீஸார் லாரியுடன் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் கூத்தேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் கோவிந்தசாமி ஆகிய இருவரும் லாரியை ஓட்டி வந்தவர்கள் எனவும் 35 லிட்டர் எடைகொண்ட 340 கேன்களில் 11 ஆயிரத்து 900 லிட்டர் அளவிலான எரிசாராயம் டெல்லியிலிருந்து சென்னைக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.
தொடர்ந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் மற்றும் எட்டு லட்சம் மதிப்புள்ள லாரி இரண்டையும் போலீஸார் பறிமுதல் செய்ததுடன் கைது செய்யப்பட்ட இரண்டு ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.