சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் சடலம் வட்டாட்சியர் முன்னிலையில் இன்று (நவ.6) தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரெங்காபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்புராஜ் (50). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னள் காணாமல் போனார். உறவினர்கள் கேட்கும் போது சுப்புராஜின் மனைவி பிச்சையம்மாள்(40), மகன் சுரேஷ் (28), மகள் பிரியா (25)மூவரும் சுப்புராஜ் வெளியூர் வேலைக்கு சென்று விட்டதாகக் கூறிவந்துள்ளனர்.
சந்தேகமடைந்த சுப்புராஜின் சகோதர்கள் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் பின்புறம் கழிவறை அருகே தலைமுடி மற்றும் எலும்புகள் உள்ளதாக சுப்புராஜின் உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, போலீஸார் அப்பகுதியைத் தோண்டி சில எலும்புகளை எடுத்து விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து, பிச்சையம்மாள், சுரேஷ், பிரியா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் சுப்புராஜை கொலைசெய்து புதைத்தது தெரியவந்தது.
மேலும், சம்பவத்தன்று இரவு சுப்புராஜ் குடித்துவிட்டு வந்து வீட்டில் தங்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், அதனால் கீழே தள்ளியபோது சுப்புராஜ் காயமடைந்து உயிரிழந்ததாகவும், பின்னர் சடலத்தை வீட்டுக்குப் பின்னால் புதைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து, சுப்புராஜின் மனைவி பிச்சையாம்மாள், மகன் சுரேஷ், மகள் பிரயா ஆகியோரை போலீஸார் கடந்த வாரம் கைதுசெய்தனர்.
இந்நிலையில் இன்று காலை சாத்தூர் வட்டாட்சியர் செந்திவேல், காவல் ஆய்வாளர் சுபக்குமார், அரசு மருத்துவர் தலைமையில் சுப்புராஜ் புதைக்கபட்ட இடத்தை தோண்டி எலும்புக்கூடு மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.மேலும் இந்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.