திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்ற மர்ம நபர்கள், 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 30 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிக்கொண்டு சென்றனர்.
விக்கிரமசிங்கபுரம், வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ் (45). இவர், விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்கு பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வேலை நேரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆய்வு நடத்தினர்.
யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்து அங்கிருந்த நகைகளை திருடிக்கொண்டு சென்றுள்ளனர். கடையில் இருந்த சுமார் 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 30 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனதாகக் கூறப்படுகிறது. மேலும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.
பிரதான சாலையில் இருந்த நகைக் கடையில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.