சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் செல்போன் கோபுரம் வைப்பதாகக் கூறி விவசாயிடம் மர்மநபர் ஒருவர் நூதன மோசடி செய்துள்ளனர்.
சிங்கம்புணரி அருகே படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவர் வெளிநாடு சென்றுவிட்டு சமீபத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளனர். ஊரில் விவசாயம் செய்து வந்தநிலையில், கடந்த வாரம் அவரது மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், மொபைல் சேவை வழங்கும் ஒரு தனியார் நிறுவனம் பெயரில் கோபுரம் அமைக்க வீட்டின் மாடி வாடகைக்கு தேவைப்படுகிறது. அதற்கு வைப்புதொகையாக ரூ.35 லட்சமும், மாத வாடகையாக ரூ.29,500-ம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பிய அழகர்சாமி எஸ்எம்எஸ் வந்த மொபைல் எண்ணுக்கு பேசியுள்ளார். அதில் பேசிய நபர் ஆதார், குடும்ப அட்டை, புகைப்படம் போன்றவற்றை மின்னஞ்சலுக்கு அனுப்ப கூறியுள்ளார். அவற்றை அனுப்பி வைத்ததும். அனுமதி கிடைத்துவிட்டதாக கூறி ஒரு கடிதத்தை மர்ம நபர் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து வைப்புத் தொகையாக ரூ.12,500-ம், தடையில்லாத சான்று, ஜிஎஸ்டி எண் மற்றும் இதர செலவுக்காக ரூ.29,500-ம் சேர்த்து ஒரு வங்கி கணக்கை அனுப்பி, அதில் செலுத்த கூறியுள்ளார்.
இதையடுத்து தான் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை அந்த வங்கி கணக்கில் அழகர்சாமி செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய சிறிது நேரத்தில் அந்த மர்மநபரின் மொபைல் எண் சுவிட்ஆப் ஆனது.
இதையடுத்து தான் ஏமாற்றம் அடைந்தது அழகர்சாமிக்கு தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து அவர் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.