ரயில் இன்ஜினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மெக்கானிக் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு 
க்ரைம்

ரயில் இன்ஜினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மெக்கானிக் விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

ந. சரவணன்

வேலூர்

ஜோலார்பேட்டை அருகே பழுதாகி நின்ற ரயில் இன்ஜினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட இன்ஜின் மெக்கானிக், விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வரை செல்லும் மின்சார ரயில் இன்று (நவ.5) ஜோலார்பேட்டை அடுத்த கேதாண்டப்பட்டி அருகே சென்றபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ரயில் நடுவழியில் நின்றது. இதுகுறித்து ரயில் இன்ஜின் ஓட்டுநர் ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், ரயில்வே யார்டு ஊழியர்கள், இன்ஜின் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கேதாண்டப்பட்டிக்கு விரைந்து சென்று, துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் சேதமடைந்த பேண்டோ கம்பிகளை (மின்கடத்தி) சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

45 நிமிடங்களில் இப்பணிகள் முடிவடைந்தன.

இதையடுத்து, அரக்கோணம் - சேலம் மின்சார ரயில் அங்கிருந்து புறப்பட்டது. பணிகள் முடிவடைந்ததும், ரயில்வே யார்டு ஊழியர்கள் மற்றும் இன்ஜின் பராமரிப்பாளர்கள் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவைச் சேர்ந்த இன்ஜின் மெக்கானிக் கோபிநாதன் (42) என்பவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.

அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை வரை செல்லும் லால்பாக் விரைவு ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்கள் கண்முன்னே இன்ஜின் மெக்கானிக் உடல் சிதறி உயிரிழந்ததால், ரயில்வே ஊழியர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே ஊழியர்கள் அங்கு வந்து விரைவு ரயிலில் அடிபட்டு சிதறிய கோபிநாதனின் உடல் பாகங்களைச் சேகரித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் சிக்கி உயிரிழந்த கோபிநாதனுக்கு உமா (36) என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

SCROLL FOR NEXT