க்ரைம்

கொள்ளிடம் போலீஸாருக்கான நீதிமன்ற அனுமதி இன்றுடன் முடிகிறது: திருச்சி, மதுரை, கர்நாடகா போலீஸார் சுரேஷை காவலில் எடுக்க முயற்சி

செய்திப்பிரிவு

திருச்சி

பிரபல கொள்ளையன் முருகனின் சகோதரி மகனான சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி, மதுரை, கர்நாடகா போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிச்சாண்டார் கோவில் கிளை உள்ளது. கடந்த ஜன.26, 27-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், வங்கியிலிருந்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் கொள்ளை போனது. இதுதொடர்பாக, 9 மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியை அடுத்த காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் ராதாகிருஷ் ணன்(28) என்பவரிடம் நடத்திய விசாரணையில், பிரபல கொள் ளையன் முருகன், அவரது சகோதரி மகன் சுரேஷ், தனது உறவினரான வாடிப்பட்டியை அடுத்த தெத்தூரைச் சேர்ந்த கணேசன் ஆகியோருடன் சேர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்த சுரேஷை முதலில் 7 நாட்களும், அடுத்ததாக 7 நாட்களும் காவலில் எடுத்து கொள்ளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரேஷிடம் காவலில் விசாரிக்க அளித்திருந்த அனுமதி முடிவடைவதால் இன்று(நவ.5) ரங்கம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளனர். எனினும் இந்த வழக்கில் இன்னும் மேலும் சில விவரங்களைப் பெற வேண்டியிருப்பதால் சுரேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க கொள்ளிடம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுதவிர உப்பிலியபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சமயபுரம் கூட்டுறவு வங்கி, மண்ணச்சநல்லூர் தனியார் நிதி நிறுவனம் ஆகியவற்றில் நடைபெற்ற கொள்ளை முயற்சி வழக்குகளிலும் சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், அந்த வழக்குகளின் விசாரணைக்காக உப்பிலியபுரம், சமயபுரம், மண்ணச்சநல்லூர் போலீஸாரும் சுரேஷை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடை முறைகளைத் தொடங்கியுள்ளனர்.

அதேபோல மதுரையில் நடை பெற்ற கொள்ளை சம்பவங்களிலும் சுரேஷூக்கு தொடர்பு இருப்பதால், மதுரை போலீஸாரும் சுரேஷை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவைமட்டுமின்றி கர்நாடகா விலும் சுரேஷ் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால், அந்த மாநில போலீஸாரும் சுரேஷை காவலில் எடுத்து திருச்சியிலிருந்து பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

முருகன் கும்பல் கொள்ளை யடித்த நகைகள், பணம் எங்கெங்கு உள்ளன என்பது குறித்த விவரங்கள் சுரேஷூக்குத்தான் அதிகமாக தெரியும் என்பதால் அவரை, அடுத்து காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி, மதுரை, கர்நாடகா போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT