திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் தன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (65). திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளரான இவர், திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ஆவார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மேயராகப் பொறுப்பு வகித்தார். இவரது கணவர் முருக சங்கரன் (74), நெடுஞ்சாலைத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
உமா மகேஸ்வரியின் வீட்டில் பணிப்பெண்ணாக டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் (35) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி உமா மகேஸ்வரியின் வீட்டுக்குச் சென்ற மாரியம்மாள் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இதனால், மாரியம்மாளைத் தேடி அவரது தாயார் வசந்தா சென்றார். அப்போது, உமா மகேஸ்வரியின் வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், மாரியம்மாள் ஆகியோர் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சங்கரன்கோவிலைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜா அப்பகுதியில் நடமாடியது தெரியவந்தது.
இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, உமா மகேஸ்வரி உட்பட 3 பேரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கார்த்திக் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். தனது தாயார் சீனியம்மாளின் அரசியல் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்ததால், உமா மகேஸ்வரியைக் கொலை செய்ததாகவும், அப்போது வீட்டில் இருந்த அவரது கணவர், பணிப்பெண் ஆகியோரையும் கொலை செய்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், அந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கார்த்திக் ராஜாவை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும், சீனியம்மாளிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, முன்னாள் மேயர் கொலைக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சீனியம்மாள் மறுத்து வந்தார்.
இந்நிலையில், போலீஸாரின் தொடர் விசாரணையில், இந்த கொலைச் சதியில் சீனியம்மாள் (59), அவரது கணவர் தன்னாசி (60) ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரையில் இருந்த இவர்கள் இருவரையும் இன்று (அக்.30) சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.