க்ரைம்

ரூ.1 கோடி மதிப்பிலான 600 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆம்புலன்ஸில் கடத்திய 2 பேர் உடுமலையில் கைது

செய்திப்பிரிவு

உடுமலை

கோவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் பல கோடி மதிப்புடைய கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் வந்த ஆம்புலன்ஸில் போலீஸார் சோதனை செய்தபோது 300 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

அதை பறிமுதல் செய்த போலீஸார், தனியார் ஆம்புலன்ஸின் உரிமையாளர் கருப்புசாமியின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் 13 மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ. 1 கோடி மதிப்பிலான மொத்தம் 600 கிலோ கஞ்சா மூட்டைகள் சிக்கின. இவை ஆந்திர மாநிலத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கடத்திவந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண்குமார் (22), அசோக்குமார் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்துடன் தலைமறைவான கருப்புசாமியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT