ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் அமமுக நிர்வாகி வீட்டில் 85 பவுன் தங்க நகைகளும் ரூ.5.45 லட்சம் ரொக்கமும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல் வியாபாரி வீட்டில் 40 பவுன் தங்க நகைகளும் திருடு போனது.
ஒரே இரவில் நடந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணன் கோயில் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (40). அமமுகவில் பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்றுமுன்தினம் பரமக்குடியில் உள்ள மைத்துனர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்றார்.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி சந்தோஷ் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்று கிருஷ்ணன்கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபொழுது சந்தோஷ் குமார் வீட்டில் 85 பவுன் நகைகளும் ரூ. 5.45 லட்சம் பணமும் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருவில்லிபுத்தூர் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் முருகன். நெல் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஒரே இரவில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கிருஷ்ணன் கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.