பெங்களூரு
பெங்களூரு அலையன்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐயப்பா கொலை வழக்கில், தற்போதைய துணைவேந்தர் சுதீர் அங்கூர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அலையன்ஸ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ஐயப்பா (53) கடந்த செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆர்.டி.நகர் போலீஸார், பெங்களூரு கிழக்கு மண்டல துணை ஆணையர் சசிகுமார் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றும் சூரஜ் சிங் (29) கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஐயப்பாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் நேற்று அலையன்ஸ் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுதீர் அங்கூரை (57) கைது செய்தனர்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் கூறுகையில், ''அலையன்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் அதன் சொத்துகளைப் பங்கு பிரிப்பதில் தற்போதைய துணை வேந்தர் சுதீர் அங்கூருக்கும், அவரது சகோதரர் மதுகர் அங்கூருக்கும் கடந்த 5 ஆண்டுகளாகத் தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஐயப்பா, மதுகர் அங்கூருக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
இதனால் ஐயப்பா, மதுகர் அங்கூர் ஆகிய இருவரையும் கொலை செய்ய சுதீர் அங்கூர் திட்டமிட்டுள்ளார். கடந்த 5 மாதங்களாக கொலை செய்ய முயன்று வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த மதுகர் அங்கூர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தில் முறையிட்டு, போலீஸாரின் காவலைப் பெற்றுள்ளார். இதனால் அவரைக் கொலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் துணைவேந்தர் ஐயப்பாவை சூரஜ் சிங் கூலிப் படையைச் சேர்ந்த 4 பேருடன் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனை சூரங் சிங் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன் அடிப்படையில் துணைவேந்தர் சுதீர் அங்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.