அ.வேலுச்சாமி
திருச்சி
திட்டமிட்டு கொள்ளையடித்து வந்த முருகன், தன் சகோதரியின் மகன் சுரேஷை பெரிய ஆளாக்க நினைத்த விஷயத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் மீது தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் சுமார் 100-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் பேசத் தெரிந்த முருகன் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் என பெரிய அளவிலான இலக்குகளை குறிவைத்தே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆனாலும் அவர், போலீ ஸாரிடம் உடனடியாக சிக்காமல் இருந்ததற்கு, கொள்ளை யடிப்பதற்கு முருகன் தேர்வு செய்யக்கூடிய துணை ஆட்களும் முக்கிய காரணம் என்கின்றனர் போலீஸார். அதிலும் தன் சகோதரி மகன் சுரேஷ் மீது முருகன் மிகுந்த நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்ததாக தனிப்படை போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது:
லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கு தொடர்பாக சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, அதில் முருகன் குறித்த பல்வேறு தகவல்கள் தெரியவருகின்றன. கொள்ளைக்கான இடம், கொள்ளை யடிக்கும் நாள், கொள்ளையில் உடன் செயல்படக்கூடிய நபர்களை மிகவும் கவனமான முருகன் தேர்வு செய்து வந்துள்ளார். அவர்களில் தினகரன், கணேசன் ஆகியோர் முக்கிய நபர்களாக இருந்தபோதிலும், தன் சகோதரி மகனான சுரேஷ் மீது அதிக அக்கறையுடன் செயல்பட்டு வந்துள்ளார்.
திருவாரூரில் சுரேஷை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என நினைத்து, முதலில் அவருக்கு ஜே.சி.பி, ரோடு ரோலர் உள்ளிட்ட வாகனங்களை வாங்கிக் கொடுத்து சாலைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக மாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், எதிர்பார்த்தபடி சுரேஷால் அந்தத் தொழிலில் வெற்றி பெற முடியவில்லை.
இதையடுத்து, சுரேஷை தன்னுடன் ஐதராபாத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்யும்போது, தெலுங்கு சினிமாத் துறை சார்ந்த நபர்களுடன் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அளித்த யோசனையின்படி கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு, என்.ராஜம்மாள் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய முருகன், அதன்மூலம் சுரேஷை ஹீரோவாக வைத்து ‘மனச வினவ', ‘ஆத்மா' என்ற 2 படங்களை தயாரித்துள்ளார். அந்தச்சூழலில் சைபராபாத் போலீஸாரிடம் முருகன், சுரேஷ், தினகரன் ஆகியோர் சிக்கிக் கொண்டதால், அந்த படங்கள் திரைக்கு வரவில்லை. இதனால் சுரேஷை நடிகராக்கும் கனவும் தகர்ந்தது.
இதற்கிடையே முருகன் எச்ஐவி பாதிப்புக்குள்ளானார். தனது வாழ்நாள் முடியப் போகிறது என்பதை உணர்ந்த முருகன், அதற்கு முன்பாக சுரேஷூக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அந்த சமயத்தில், ஏற்கெனவே சேலம் சிறையில் இருந்தபோது பழக்கமான மதுரையைச் சேர்ந்த கணேசனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து முருகன், சுரேஷ், கணேசன் உள்ளிட்டோர் சேர்ந்து சமயபுரம் நெ.1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தனர். இதில் கிடைத்த சுரேஷின் பங்கு நகைகளை விற்று, அந்த பணத்தின் மூலம் மதுரை சமயநல்லூர் பகுதியில் அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை கணேசன் வைத்துக் கொடுத்துள்ளார். மேலும், சுரேஷூக்கு அங்கு வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து குடிவைத்துள்ளார். ஆனால், அலுமினிய பாத்திரத் தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டு, அதை சமாளிக்க முடியாமல் மூடிவிட்டனர். இதனால் சுரேஷூக்கு பல லட்ச ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் முருகன், சுரேஷ், கணேசன் ஆகியோர் சேர்ந்து லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்துள்ளனர். இதில் சுரேஷ், கடன் பிரச்சினையை சமாளிப்பதற்காக தனக்கு வழங்கப்பட்ட பங்கு நகைகளில் ஒரு கிலோவை உடனடியாக விற்பனை செய்து, அதற்காக மகேந்திரன் என்பவரிடம் ரூ.7 லட்சம் முன்பணமாக பெற்றிருந்தார். மீதமுள்ள நகைகளை விற்பனை செய்வதற்குள் சிக்கிக் கொண்டனர்.
திட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து வந்த முருகன், தன் சகோதரியின் மகனான சுரேஷை பெரிய ஆளாக்க நினைத்த விஷயத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளார் என்றனர்.