கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் புதையல் கிடைத்துள்ளதாக சந்தேகப்பட்டு இளைஞர் ஒருவரை பெண் ஆய்வாளர் மேற்பார்வையில் கடத்திய கும்பல் செயின் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றது. இதுகுறித்த விசாரணையில் பெண் ஆய்வாளர், எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே சரல்விளை பகுதியில் வசிப்பவர் ஜெர்லின் (24). ஆரம்பத்தில் பொக்லைன் ஓட்டுநராக வேலை பார்த்துவந்த இவர் திடீரென வசதியானவராக மாறினார். சிறிய ஊர் என்பதால் அனைவருக்கும் அவரது திடீர் வளர்ச்சி கண்ணை உறுத்தியது. இரண்டு கார்கள், ஜேசிபி எந்திரம் என அவர் வசதியாக வலம் வந்ததும், கையில் பணப்புழக்கம் திடீரென அதிகமாக இருந்ததையும் கண்ட சிலர் ஜெர்லினுக்கு தங்கப் புதையல் கிடைத்தது அதனால்தான் இந்த திடீர் வசதி என கிளப்பிவிட்டனர்.
இந்தத் தகவல் கருங்கல் போலீஸார் காதுக்கும் சென்றது, இதையடுத்து கருங்கல் போலீஸார் ஜெர்லினிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சில நாட்களுக்குமுன் இளைஞர் ஜெர்லினை ஒரு கும்பல் கடத்தியது. அவரை திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு கடத்திச் சென்ற கும்பல் தங்கப் புதையலை எங்கே வைத்துள்ளாய் எங்களுக்கும் பங்கு கொடு என்று கேட்டு தாக்கியுள்ளனர்.
தங்கப் புதையல் என்று ஒன்றுமே கிடையாது என்று சொல்லியும் தாக்கியுள்ளனர். அவரைப் பிடித்து வைத்தவர்கள் அடிக்கடி யாரிடமோ போனில் பேசிவிட்டு பின்னர் வந்து புதையலில் பங்கு கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஜெர்லினிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு அடித்துத் துரத்தியுள்ளனர்.
தன்னைக் கடத்தி தாக்கி 7 சவரன் செயினைப் பறித்த கும்பல் குறித்து ஜெர்லின் அளித்த புகாரின்பேரில் குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜெர்லின் தனது தொழிலை பெரிய அளவில் விருத்தி செய்ய கடன் வாங்கி வாகனங்களை வாங்கியதாக ஆவணங்களைக் காட்டியுள்ளார். தன்னைக் கடத்திய சம்பவத்தில் கருங்கல் போலீஸாரும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து யார் அந்த போலீஸார் என விசாரணை நடத்த குமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டார். விசாரணையிலும், அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் புதையல் கேட்டு ஜெர்லினைக் கடத்தி சித்ரவதை செய்ததாக 7 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேக்காமண்டபத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற பள்ளி ஆசிரியர், வெட்டுர்ணிமடத்தைச் சேர்ந்த ஜெரின்ராபி, கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தங்களுக்கு வழிகாட்டியது, கருங்கல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் பொன்தேவி, ஏட்டு ஜெரோன்ஜோன்ஸ், சிறப்பு எஸ்ஐ ரூபன் ஜெபதிலக் என்று தெரிவித்துள்ளனர்.
வள்ளியூரில் ஜெர்லின் கடத்தி வைக்கப்பட்டிருந்த பண்ணை வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் பொன்தேவி சென்று வந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த செல்போனிலும் அவர் அடிக்கடி பேசிவந்தது கால் லிஸ்ட் மூலம் தெரியவந்தது.
ஜெர்லினிடம் புதையலில் பங்கு கேட்டு பொன்தேவி மிரட்டியிருப்பது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இதைத்தொடர்ந்து பொன்தேவியைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை டிஐஜி பிரவின்குமார் அபினவ் உத்தரவிட்டார். இதற்கான சஸ்பெண்ட் உத்தரவை தூத்துக்குடியில் உள்ள பொன்தேவியின் வீட்டில் போலீஸார் ஒட்டினர்.
இந்த விவகாரத்தில் உடன் இருந்த எஸ்ஐ ரூபன் ஜெயதிலக், ஏட்டு ஜெரோன் ஜோன்ஸ் ஆகியோர் ஏற்கெனவே சோதனைச் சாவடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் பொன்தேவி உள்ளிட்ட மூவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.