தம்பதியின் சடலம் புதைக்கப்பட்டதாக கருதப்படும் பகுதி. 
க்ரைம்

மகன் திருமணத்துக்கு அக்காவை அழைக்க வந்த தம்பதி கொலை?- சடலம் புதைக்கப்பட்டதாக சந்தேகம்

செய்திப்பிரிவு

திருப்பூர் 

வெள்ளகோவில் அருகே மகனின் திருமணத்துக்கு அக்காவை அழைக்க வந்த தம்பதியை கொலை செய்து, வீட்டுப் பகுதியிலேயே புதைத்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கரூர் மற்றும் வெள்ளகோவில் போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறிய தாவது: கரூரை சேர்ந்தவர் செல்வ ராஜ் (49). பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவரது மனைவி வசந்தாமணி (45). இவர்களது மகன் பாஸ்கரனுக்கு வரும் நவம்பர் 1-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்துள்ள னர். இதற்காக உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்துக் கொண்டிருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே சேனாதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தண்ட குமாரவலசு கிராமத்தில் வாழும் செல்வராஜின் அக்கா கண்ணாத்தாள் (51) என்பவரை அழைக்க கடந்த 10-ம் தேதி கரூரில் இருந்து தம்பதியர் காரில் வந்துள்ளனர்.

அன்று இரவு சுமார் 8.30 மணிக்கு பாஸ்கரன் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது இன்னும் சிறிதுநேரத்தில் கிளம்பிவிடுவோம் என தம்பதியர் தெரிவித்துள்ளனர். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அலைபேசிக்கு மீண் டும் பாஸ்கரன் தொடர்பு கொண்ட போது, அவர்களது அலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. பின் மறுநாளும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பாஸ்கரன், கரூர் மாவட்டம் தாந்தோனி போலீஸ் நிலையத்தில் பெற்றோரைக் காணவில்லை என புகார் அளித்தார்.

இந்நிலையில் கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுக்காளி யூர் பகுதியில் மர்மமான முறையில் பலமணி நேரமாக கார் நிற்பதாகக் கூறி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அது பாஸ்கரனின் பெற்றோர் சென்றிருந்த கார் எனத் தெரியவந்தது. காருக்குள் திருமண அழைப்பிதழ்கள் மட்டுமே இருந்துள்ளன.

போலீஸாரின் விசாரணையில், செல்வராஜின் அக்கா வீட்டு அருகி லேயே தம்பதியின் அலைபேசி அணைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணாத்தாளின் வீட்டுக்கு நேற்று மாலை போலீஸார் சென்றபோது அங்கு அவர் இல்லை. இதையடுத்து வீட்டின் பின்புறம் சென்ற போலீஸார், அங்கு சமமற்ற நிலையில் இருந்த நிலப்பகுதியை லேசாகத் தோண்டினர். அப்போது புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கை மட் டும் வெளியே தெரிந்தது.

இதையடுத்து தம்பதியினர் கொல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கரூர் மற்றும் வெள்ளகோவில் போலீஸார் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

சொத்து பிரச்சினை காரணமாக செல்வராஜ் தம்பதியை கண்ணாத்தாள் கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என்பது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். கண்ணாத்தாளின் மகள் பூங்கொடி, மருமகன் நாகேந்திரன் ஆகியோரும் அந்த வீட்டில் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். முதல்கட்ட மாக கண்ணாத்தாளிடம் விசாரித்து வருகிறோம். இரவாகிவிட்டதால் நாளை (இன்று) காலை சடலத்தை தோண்டியெடுத்து விசாரிக்க முடியும், என்றனர்.

SCROLL FOR NEXT