தேனி
நீட் நுழைவுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் சிக்குகிறார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது அந்த தனியார் மருத்துவக் கல்லூரி. அங்கு முதலாம் ஆண்டு பயிலும் மாணவி பிரியங்கா. இவர்தான் தற்போது சிபிசிஐடி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள மாணவி. விரைவில் மாணவி ரிமாண்ட் செய்யப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதன்முதலில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா. அவரது தந்தை வெங்கடேசன் அளித்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் மேலும் 4 மாணவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.
மாணவி அபிராமி, மாணவர்கள் ராகுல், பிரவீன், இர்ஃபான் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். மாணவி அபிராமி விடுவிக்கப்பட்ட நிலையில் மற்ற மூன்று மாணவர்களும் கைதாகினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மாணவி பிரியங்கா மீது சிபிசிஐடி கவனம் திரும்பியது.
இதனையடுத்து சென்னை விரைந்த குழு மாணவி பிரியங்கா, அவரது தாயாரை தேனிக்கு நேற்றிரவு (வெள்ளி இரவு) அழைத்து வந்தனர். விடிய விடிய விசாரணை நடந்துள்ளது.மாணவியின் தாய் மைனாவதியிடமும் விசாரணை நடைபெற்றது. இவர்களின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி.
தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விரைவில் மாணவி ரிமாண்ட் செய்யப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.