க்ரைம்

சக மாணவரை அரிவாளால் வெட்டும் சட்டக்கல்லூரி மாணவர்: வலைதளத்தில் வைரலாகும் காணொலி

செய்திப்பிரிவு

சென்னை

பல்லாவரம் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் பயிலும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே பார்க்கிங் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலால் சக மாணவனை இன்னொரு மாணவர் கத்தியால் வெட்டிய பரபரப்பு காணொலி வலைதளங்களில் பரவி வருகிறது.

சென்னையில் சீன பிரதமர் வருவதை ஒட்டி போலீஸார் உச்சபட்ச டென்ஷனில் இருக்கின்றனர். குற்றச்சம்பவங்கள் நிகழா வண்ணமும், பாதுகாப்பு குறைபாடு இல்லா வகையிலும் இருப்பதற்காக வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் சென்னையில் நடைபெற்ற சில சம்பவங்கள் போலீஸார் டென்ஷனை கூட்டியுள்ளது.

அண்ணா சாலையில் ரவுடிகளுக்குள் மோதல் நாட்டு வெடிகுண்டு வீச்சு என்ற நிகழ்வு முடிவதற்குள் பல்லாவரத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இடையே மோதலில் அரிவாளை வைத்து வெட்டிய நிகழ்வு காணொலியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாறு இந்திரா நகரில் வசிப்பவர் அஸ்வின்குமார்(21). வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பின் 5-ம் ஆண்டு மாணவர். ராயபேட்டையில் வசிப்பவர் கார்த்திக் கணேஷ் (21). இவரும் அதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவர்.

இன்று மதியம் அஸ்வின் குமார் தனது காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்போது முன்னால் இருசக்கர வாகனத்தில் கார்த்திக் கணேஷ் சென்றுள்ளார். ஒரு இடத்தில் அவர் வண்டியை நிறுத்த அஸ்வின்குமார் ஹாரன் அடித்து வழி விடச்சொல்லியுள்ளார்.

ஆனால் கார்த்திக் கணேஷ் வழி விடாமல் பைக்கில் நின்று கொண்டிருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கையால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கார்த்திக் கணேஷ் பட்டா கத்தியை எடுத்துவந்து அஸ்வின் குமார் தலை மற்றும் கையில் வெட்டினார். இதை எதிர்பாராத அஸ்வின் தடுத்தார். ஆனாலும் கார்த்திக் கணேஷ் வெட்டமுயன்றார்.

இதைப்பார்த்த சக மாணவர்கள் ஓடிவந்து இருவருக்கும் இடையே புகுந்து வெட்டவிடாமல் தடுத்து பிடித்து விலக்கி விட்டனர். தலை மற்றும் இடது உள்ளங்கையில் வெட்டுக்காயம் பட்ட அஸ்வின் குமாருக்கு தலையில் மூன்று தையல் போடப்பட்டு சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்போலோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேற்கண்ட மோதலை மாணவர்களில் ஒருவர் படம் பிடித்து காணொலியை வலைதளத்தில் போட அது வைரலானது. வெட்டிய கார்த்திக் கணேஷை போலீஸார் பிடித்து விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT