செங்கம்
திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சீராத்தோப்பு சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா நகைக்கடை சுவற்றில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரம் கடந்த 2-ம் தேதி அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டது. சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் முகமூடிகளை மாட்டிக் கொண்டு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர், நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதுகுறித்து கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், திருவாரூர் அடுத்த விளமலில் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட வாகன சோதனையில், மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(35) சிக்கினார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த சீராத்தோப்பு பகுதியில் வசிக்கும் சுரேஷ்(28) தப்பி ஓடிவிட்டார். மணிகண்டனிடம் இருந்த 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் தலைமையிலான கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முருகன், சுரேஷ் உள்ளிட்டவர்கள் தேடப்பட்டு வந்தனர்.
இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திருவாரூர் சீராத்தோப்பு பகுதியில் வசிக்கும் சுரேஷ்(28) இன்று (அக்.10) காலை சரணடைந்தார்.
தினேஷ்குமார்