திருச்சி
திருவாரூரைச் சேர்ந்த கொள்ளை யன் முருகன், கொள்ளையடித்த பணத்தில் சுரேஷை நடிகராக்கி தெலுங்கு திரைப்படம் தயாரித்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தது தொடர்பாக திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன்(34), கொள்ளை கும்பலின் தலைவன் முருகனின் சகோதரி கனகவல்லியை கைது செய்த போலீஸார், தப்பி ஓடிய கனகவல்லியின் மகன் சுரேஷை(28) தேடிவருகின்றனர்.
முருகன், சுரேஷ் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் என 60 பேரிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், தற்போது பெங்களூரு மற்றும் ஆந்திராவில் முகாமிட்டு விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
விசாரணை குறித்து காவல் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் பேசும் முருகன், சுரேஷ் ஆகியோர் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா வில் அதிக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக தெலங்கானாவில் மகபூப் நகர், சைபராபாத், ஆந்திராவில் சித்தூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள வங்கி கள் உட்பட 30 இடங்களில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மாநிலம் விட்டு மாநிலம்
கடந்த 2008-ல் காஞ்சிபுரத்தில் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த முருகன் அங்கிருந்து பெங்களூருவுக்கும், அங்கு சில திருட்டு வழக்குகளில் சிக்கியதை அடுத்து ஆந்திராவுக்கும் இடம் பெயர்ந்தார். அங்கு கிஸ்மத்புர் என்ற கிராமத்தில் தங்கி சுரேஷ், திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த தினகரன் ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலத்திலும் பல இடங் களில் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
சினிமா தயாரிப்பு நிறுவனம்
கொள்ளையடித்த பணத்தில், ‘என்.ராஜம்மாள் பிலிம்ஸ்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய முருகன், 2012-ல் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றில் பதிவு செய்ததுடன் சுரேஷை ஹீரோவாக வைத்து ‘மனச வினவ' என்ற தெலுங்கு படத்தை தயாரித்துள்ளார். ‘ஆத்மா' என்ற பெயரில் அடுத்த படத்தை தொடங்கிய நிலையில் 2015-ல் தெலங்கானாவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள திருட்டு நகைகளுடன் சைபராபாத் போலீஸாரிடம் முருகன், சுரேஷ், தினகரன் ஆகியோர் சிக்கினர். இதனால், முருகன் தயாரித்த படம் திரைக்கு வரவில்லை.
2018-ல் சென்னையில் கைது
அதன்பின் சென்னையில் தங்கி அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முருகன் உள்ளிட்டோர் கடந்த 2018-ல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட முருகன் திருவாரூரில் தங்கியுள்ளார். முருகனுக்கு தமிழ்நாட்டில் மஞ்சுளா, பெங்களூருவில் மஹி என 2 மனைவிகள் இருப்பதாகவும், 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். சினிமாவில் முதலீடு, எய்ட்ஸ் நோய் சிகிச்சை ஆகியவற்றை அடுத்து முருகன் பணத்தட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளார்.
போலீஸ் கண்காணிப்பில் எஸ்எஸ்ஐ
முருகன் மீது 100-க்கும் மேற்பட்ட பிடிவாரன்டுகள் இருப்பதாக தெரிகிறது. ஆரம்ப காலத்திலிருந்து முருகனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திருவாரூரைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் தற்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டராகி(எஸ்எஸ்ஐ) பணியாற்றி வருகிறார். வெளிமாநில போலீஸாரிடம் முருகன் பிடிபடாமல் இருப்பதற்காக அவர் பலமுறை உதவியதாக தெரியவந்துள்ளதால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரது நடவடிக்கைகளை கண்கா ணித்து வருகிறோம் என்றனர்.