ஆண்டிபட்டி
நீட்தேர்வு முறைகேடு வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் இர்பான் சிபிசிஐடி.விசாரணைக்காக இன்று(அக்.9) தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆனால், சேலம் போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கு முன்னரே இர்பானை காரில் ஏற்றிச் சென்ற சிபிசிஐடி போலீஸார் மேலிட உத்தரவால் அப்படி செய்ததாகக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா(20). இவர் நீட்தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து க.விலக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உதித்சூர்யா, பிரவீன்,ராகுல் ஆகிய மாணவர்களும், அவர்களது பெற்றோருடன் கைது செய்யப்பட்டனர். இதே முறைகேட்டில் ஈடுபட்ட தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து இவரது தந்தை முகமதுசபி தேனி சிபிசிஐடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த இர்பான் கடந்த ஒன்றாம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் அங்கு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று இர்பான் ஆண்டிபட்டி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த போது க.விலக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு எண்ணை மேற்கோள்காட்டி இருந்ததால் அவர் இதன் எல்லைக்கு உட்பட்ட ஆண்டிபட்டி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேந்திரவர்மா இந்த வழக்கு குறித்து ஆவணங்கள் தேனி நீதிமன்றத்தில் உள்ளன. எனவே இர்பானை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துக என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாணவர் இர்பான் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிபிசிஐடிக்கு மேலிடத்து உத்தரவு:
நீதிமன்ற காவலில் உள்ள இர்பானை போலீஸார் சேலத்தில் இருந்து ஆண்டிபட்டி மற்றும் தேனிக்கு அரசுப் பேருந்தில் அழைத்து வந்தனர். இந்நிலையில் தேனிபேருந்து நிலையத்தில் இருந்து சிபிசிஐடி போலீஸார் காரில் ஏற்றிக் கொண்டு தேனி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றம் ஒப்படைத்த பிறகே சிபிசிஐடி போலீசார் இர்பானை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்று விசாரிக்க வேண்டும். ஆனால் வரும் வழியிலே மறித்து நீதிமன்றம் அழைத்து வந்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது மேலிடத்து உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டோம் என்று சிபிசிஐடி.போலீசார் தெரிவித்தனர்.