மாற்றாந்தாய் மனப்பான்மையில், தனது கணவரின் முதல் தாரத்துப் பெண் குழந்தையை மாடியிலிருந்து தள்ளிக் கொன்றுவிட்டு அழுது நாடகமாடிய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சேலையூர், அஸ்தினாபுரம் சக்ரபாணி தெரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் பார்த்திபன் (31). இவர் துரைப்பாக்கத்தில் பிரபல நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி ராகவி (6) என்கிற பெண் குழந்தை உள்ளது. மனைவி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இந்நிலையில் குழந்தை ராகவியை கவனித்துக்கொள்ள, தன்னைப்போலவே தனித்து வாழும் விதவை அல்லது விவாகரத்தானவர் தேவை என விளம்பரப்படுத்தி அதன்மூலம் சூர்யகலா (29) என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
சூர்யகலாவிற்கு ஏற்கெனவே முதல் கணவர் மூலம் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்குப் பின் வேறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம், நம் குழந்தைகளுடன் வாழ்வோம் எனக் கூறியுள்ளார் பார்த்திபன். இதை சூர்யகலாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வாழ்க்கை சீராகச் சென்றுகொண்டிருந்த நிலையில் சூர்யகலாவுக்குள் இருந்த மாற்றாந்தாய் மனப்பான்மை சிறிது சிறிதாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.
அடிக்கடி சிறுமி ராகவியை அடிப்பது, தந்தையிடம் குறைசொல்லி அடிவாங்கிக் கொடுப்பது, கொடுமைப்படுத்துவது, தனது மகனை மட்டுமே கவனித்துக்கொள்வது என இருந்துள்ளார். இதை பார்த்திபன் உணர்ந்தாலும் புத்தி சொல்லி போகப்போக சரியாகிவிடும் என நினைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பணியிலிருந்த பார்த்திபனுக்கு திடீரென போன் வந்துள்ளது. மறுமுனையில் பதற்றத்துடன் பேசிய மனைவி சூர்யகலா மகள் ராகவியைக் காணவில்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த பார்த்திபன் உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி சூர்யகலாவிடம் விசாரித்துள்ளார். ''அவள் இங்குதான் விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென தேடினால் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை'' என்று சூர்யகலா கூறியுள்ளார்.
பார்த்திபன் உடனடியாக பல இடங்களில் தேடிவிட்டு கடைசியாக ராகவி எங்கு விளையாடிக்கொண்டிருந்தாள் எனக்கேட்க மொட்டை மாடியில் என சூர்யகலா பதிலளித்துள்ளார்.
மொட்டை மாடிக்குச் சென்று பார்த்திபன் தேடியுள்ளார். வீட்டின் பின்புறம் காலி மைதானம் புதர் மண்டி இருந்துள்ளது. சந்தேகத்தின்பேரில் அங்கு சென்று பார்த்தபோது உடலெங்கும் ரத்த காயத்துடன் மகள் ராகவி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்த்திபன், உடனடியாக குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராகவியை அனுமதித்தார்.
ஆனால் ராகவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராகவி மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்கிற கோணத்தில் அக்குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து சேலையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என விசாரித்து வந்தனர். குழந்தை ராகவி மொட்டை மாடியில் விளையாடும்போது திடீரென மயங்கி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் கருதினர். ஆனால் குழந்தையின் உயரத்தை வைத்துப் பார்க்கும்போது மொட்டை மாடிச் சுவர் ஏறி கீழே விழ வாய்ப்பு இல்லை என்பதால் விசாரணையை துரிதப்படுத்தினர்.
பார்த்திபனுக்கு சூர்யகலா இரண்டாவது மனைவி என்பதால் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. ஆனால் அவர் அழுதபடி இருந்தார். பார்த்திபனும் மனைவி மீதெல்லாம் சந்தேகம் இல்லை. இது விபத்தாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கம் பக்கத்தில் அரசல் புரசலாக சூர்யகலாவின் கொடுமை போலீஸார் காதுக்கு வந்தது.
இதையடுத்து சூர்யகலாவிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தினர். என் குழந்தை அவள், அவளைப் போய் நானே கொள்வேனா? நானும் ஒரு குழந்தைக்கு தாய் என்றெல்லாம் சூர்யகலா பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சூர்யகலா குழந்தை ராகவியைக் கொன்றது தான்தான் என ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஐபிசி 174 பிரிவை 302 ஆக மாற்றி, மாடியிலிருந்து 6 வயதுப் பெண் குழந்தையை கீழே வீசிக்கொன்றதாக சூர்யகலாவை சேலையூர் போலீஸார் கைது செய்தனர்.
சூர்யகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''குழந்தை ராகவியை எனக்குப் பிடிக்கவில்லை. என் கணவர் அவள் மேல் அதிகம் பிரியம் காட்டினார். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். நமக்கு எதற்கு இன்னொரு குழந்தை நமக்குத்தான் 2 குழந்தைகள் உள்ளதே என அபார்ஷன் செய்யச் சொன்னார் . இதனால் என் கோபம் ராகவி மீது திரும்பியது.
அடுத்த குழந்தை பிறப்பதற்கு முதல் குழந்தை தடையாக இருப்பதாக நினைத்து குழந்தை ராகவியைக் கொலை செய்தேன்''.
இவ்வாறு சூர்யகலா தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.
மாற்றாந்தாய் மனப்பான்மையால் 6 வயதுப் பெண் குழந்தையை தந்தை இழக்க, சித்தி சிறைக்குச் செல்ல, அவரின் ஆண் குழந்தையின் நிலைதான் கேள்விக்குறி.