ஸ்ரீவில்லிபுத்தூர்
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக கைதுசெய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்நத வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலாதேவி ஸ்கூட்டரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆய்வு மாணவர் கருப்பசாமியும் நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருப்பதால் உதவிப் பேராசிரியர் முருகன் மட்டும் நீதிமன்றத்தில் இன்றுஆஜராகவில்லை.
அதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார். அன்றைய தினம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுகுறித்து பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அளித்த பேட்டியில், பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கில் இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உதவிப் பேராரிசியர் முருகன் நீதிமன்றத்திற்கு வராத காரணத்தால் வழக்கு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்-9-ம் தேதி பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றையதினம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.