க்ரைம்

நெல்லையில் வீட்டில் இளம் பெண்ணை பூட்டிவைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் கைது

அசோக்குமார்

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் அருகே பெண்ணை வீட்டில் பூட்டிவைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் மீட்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் விசாரணையும் நடந்து வருகிறது.

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் பீடி காலணியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சில நபர்கள் வந்து செல்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதன் அடிப்படையில் அப்பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டு அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சிலர் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில் சேலத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணை ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரச்செய்து வீட்டில் பூட்டிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடச்செய்தது தெரியவந்தது.

வீட்டில் இருந்த பெண் மீட்கபட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.மேலும் பாலியல் தொழில் நடந்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட பாளையங்கோட்டை,டவுண் மேலப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களான பாலசுப்பிரமணியம், மைதீன்,காதர்,சித்திக்,ராஜப்பா ஆகிய 5 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தப்பியோடிய கடா கஜா உள்ளிட்ட சிலரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.சேலத்தை சேர்ந்த 30 வயது பெண் நெல்லையை அடுத்த செய்துங்கநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஆசைவார்த்தைகளைக் கூறி தன்னை ஆட்டோவில் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் தன்னை ஒருவீட்டில் வைத்து பூட்டி வைத்து பல நபர்கள் மூலம் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

நெல்லை வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அழைத்துச் சென்ற நபர் யார்? என்பது குறித்த தகவல்கள் மருத்துவசிகிச்சைக்கு பின்னர் அந்த பெண்ணிடம் நடத்தபடும் விசாரணையில் தெரியவரும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT