தேனி
தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் பூட்டிய வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 250 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தெற்கு ஜெகன்நாதபுரம் பகுதியில் இவரது பங்களா இருக்கிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிய அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பின்புறம் இருந்த கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று கோபாலகிருஷ்ணன் சோதனையிட்டபோது பூஜை அறை மற்றும் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த அலமாரிகள் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததை அறிந்த கோபாலகிருஷ்ணன் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர்.
அருகருகே வீடுகள் உள்ள நிலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொள்ளை குறித்து பழனிசெட்டிப்பட்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.