க்ரைம்

திருச்சி நகைக்கடை கொள்ளை: 5 கிலோ நகை மூட்டையுடன் திருவாரூரில் சிக்கிய கொள்ளையன் : கூட்டாளி ஓட்டம் 

செய்திப்பிரிவு

திருச்சி

லலிதா ஜுவல்லரி கொள்ளையில் திடீர் திருப்பமாக வாகனச் சோதனையில் திருவாரூர் அருகே இரண்டு பேர் சிக்கியதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபரிடம் 5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரம்மாண்டமான மூன்றடுக்கு நகை மாளிகை லலிதா ஜுவல்லரி உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அந்த நகைக் கடையில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் கீழ்தளத்தில் உள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

கட்டிடத்துக்குள் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுக்க முழுதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது. ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு சுவரில் துளையிட்டு மிக நிதானமாக அங்குலம், அங்குலமாக நகை ரேக்குகளைத் திறந்து நகைகளை எடுத்து பையில் போடும் காட்சி கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

கொள்ளையர்கள் எவ்வித அடையாளத்தையும், சிறிய தடயத்தையும்கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. கொள்ளையடித்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்கிற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். புதுக்கோட்டை விடுதியில் வடமாநில இளைஞர்கள் 6 பேர் பிடிபட்டனர். அவர்களை போலீஸார் விசாரித்தபோது அவர்கள் வியாபாரிகள், கொள்ளைக்குச் சம்பந்தமில்லாதவர்கள் எனத் தெரிந்து அவர்களை விடுவித்தனர்.

கொள்ளையர்கள் கொள்ளையடித்த விதமும், அவர்கள் தப்பிச் சென்ற விதமும் பெரும் புதிராக இருந்தது. எந்த வழியாக வந்தார்கள், எந்த வாகனத்தில் வந்தார்கள், எப்படி தப்பித்துச் சென்றார்கள் என்பது போலீஸாருக்குப் புரியாத புதிராக இருந்தது. சிறு முன்னேற்றமும் இல்லாத இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் சமயபுரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இதேபோன்றுதான் 800 சவரன் நகைகளைக் கொள்ளையடித்தனர்.

அதே கொள்ளையர்களே இதையும் செய்திருக்கலாம் என போலீஸார் விசாரணையை முடுக்கிய நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்ளையில் வடமாநிலத்தவர் ஈடுபட்டிருக்கலாம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் கருதி வந்த நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

இன்று இரவு திருவாரூர் கமலாம்பாள் நகர் அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் போலீஸாரைப் பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவன் இறங்கி தப்பி ஓடிவிட, இன்னொரு நபரை போலீஸார் பிடித்தனர். சாதாரண போதை நபர்களாக இருக்கலாம் என எண்ணி விசாரித்தபோது அவர்கள் விட்டுச் சென்ற பையில் கிலோ கணக்கில் புதிய தங்கநகைகள் இருந்ததைக் கண்டு திடுக்கிட்ட போலீஸார் உடனடியாக பிடிபட்ட நபரையும் தங்க நகைகள் அடங்கிய பையையும் எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நகைகளைப் பரிசோதித்தபோது அதில் இருந்த ஹால்மார்க் மற்றும் பார் கோடு லலிதா ஜூவல்லரி நகை கடை எனக்காட்டியது. இதையடுத்து லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் இவர்கள் என போலீஸார் முடிவு செய்தனர்.

பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) எனத் தெரியவந்தது. அவருடன் ஒன்றாக வந்த நபர் சீராதோப்பு சுரேஷ் எனத் தெரியவந்தது. சிராத்தோப்பு சுரேஷ் திருவாரூரின் பிரபல ரவுடி முருகனின் உறவினர் என்பதும் தெரியவந்தது.

பிடிபட்ட மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் நகைக் கடையில் கொள்ளை அடித்தது தாங்கள் தான் என ஒப்புக் கொண்டதாகவும், அதில் தங்களது பங்கு நகைகளை எடுத்துக்கொண்டு வந்தபோது போலீஸார் வாகனச் சோதனையில் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடமிருந்த பையில் 5 கிலோ தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொள்ளையன் சிக்கிய தகவல் அறிந்தவுடன் திருச்சி தனிப்படை போலீஸார், உயர் அதிகாரிகள் திருவாரூர் விரைந்துள்ளனர். திருச்சி போலீஸார் நடத்தவுள்ள விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம். மிக சாமர்த்தியமாகத் திட்டமிட்டு நடத்திய இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் யார் மூளையாகச் செயல்பட்டது என்பதும் விரைவில் தெரியவரும்.

லலிதா ஜுவல்லரி சுவரை எப்படித் துளையிட்டார்கள், இந்தக் கொள்ளையில் யார் யாருக்கு உடந்தை, நகைக் கடை ஊழியர்கள் எவருக்கேனும் கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா? கொள்ளை அடித்த பின் எப்படி தப்பிச் சென்றார்கள்? மொத்தம் எத்தனை பேர்? என்பது போன்ற பல தகவல்கள் வெளிவர உள்ளன.

தப்பி ஓடிய சிராத்தோப்பு சுரேஷை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இன்று இரவுக்குள் சுரேஷ் சிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மிச்சமீதி கொள்ளையர்களும், உதவியவர்களும் பிடிபட வாய்ப்புள்ளது.

தமிழகத்தை உலுக்கிய மிகப்பெரிய நகைக் கடை கொள்ளை விவகாரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு கொள்ளையனைப் பிடித்த திருவாரூர் போலீஸாரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

SCROLL FOR NEXT