சென்னை
ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தை வைத்து வாடிக்கையாளர்போல் பேசி ஏமாற்றும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நூதனமாக டாக்டர் ஒருவரின் கவனத்தை திசை திருப்பி விலை உயர்ந்த செல்போனை திருடிச் சென்ற நபரை போலீஸார் பிடித்தனர்.
வாடிக்கையாளர்கள் பொருட்களை விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்கின்றனர். இதில் பிரபலமான தளம் ஓஎல்எக்ஸ். இந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள், வாங்கும் நபர்கள் விவரங்களைப் பதிவிட்டு பயனடைகின்றனர். இதில் விற்பனை சேவை மட்டுமல்லாமல் வாடகை, பயிற்சி, கல்வி என பல சேவைகளும் உள்ளன.
இதில் பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தான் உதவி செய்வதாக பேராசிரியை ஒருவர் விளம்பரம் செய்திருந்தார். இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் தான் ஆராய்ச்சிப் படிப்பு படிப்பதாகவும் அதற்கு தாங்கள் உதவ முடியுமா என்றும் கேட்டார். அதற்கு அந்தப் பேராசிரியை, உதவுகிறேன் என்றும் நேரில் சந்திக்குமாறும் கூறியுள்ளார்.
முகப்பேரில் உள்ள தனியார் உணவு விடுதியில் பேராசிரியையை சந்திப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். பேராசிரியையும் அங்கு சென்றார். அவருடன் சில நிமிடங்கள் பேசிய அந்த இளைஞர், ''உங்களுடன் பலநாட்கள் பழகியதுபோன்று உணர்கிறேன். உங்களை என் சகோதரிபோன்று பார்க்கிறேன்'' என மனதைத் தொடும் வகையில் பேசியுள்ளார்.
அவரது பேச்சில் பேராசிரியை நெக்குருகிப் போனார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த இளைஞருக்கு போன் வர, ''ஆமாம். இங்குதான் தனியார் உணவு விடுதியில் என் சகோதரியுடன் அமர்ந்திருக்கிறேன். வாருங்கள்'' எனக்கூறி இருவரது உடையின் நிறத்தையும் கூறி போனை வைத்துள்ளார்.
''யார் போனில்? என்னை சகோதரி என்கிறீர்கள்?'' என பேராசிரியர் கேட்க, ''உங்களை என் சகோதரி மாதிரி பார்க்கிறேன் என்று இப்பத்தானே மேடம் சொன்னேன். அப்படி இருக்கும்போது என் நண்பரிடம் சகோதரி என்று சொல்வதில் என்ன தப்பு?'' என்று கேட்டுள்ளார்.
அவர்களை அடையாளம் கண்டு வந்த நபரிடம் பேராசிரியையை அறிமுகப்படுத்திவிட்டு எங்கே உங்கள் செல்போனைக் காட்டுங்கள் எனக் கேட்டுள்ளார் அந்த இளைஞர்.
வந்த நபரும் செல்போனைக் கொடுத்துள்ளார். அசல் விலை என்ன என்று கேட்டவர் செல்போனைக் கழற்றி, ''என் சிம் கார்டைப் போட்டு செக் பண்ணலாமா'' எனக் கேட்க, ''தாராளமாக'' என்று கூறியுள்ளார் வந்த நபர். உடனே செல்போனில் சிம் கார்டை மாற்றிப்போட்டு பேசிய நபர், ''சிஸ்டருடன் பேசிக்கொண்டிருங்கள். சிக்னல் இல்லை வெளியில் வாசலில் நின்று பேசிவிட்டு வருகிறேன்'' என செல்போனுடன் சென்றார். அவர் திரும்பி வரவே இல்லை.
செல்போனைக் கொடுத்த நபர் சற்று நேரம் நாகரிகம் கருதி பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் அந்த நபர் திரும்பி வராததால், ''உங்கள் பிரதர் எங்கே இன்னும் காணவில்லை. போன் செய்யுங்களேன்'' என்று கேட்டுள்ளார்.
''அய்யோ. அவர் என் பிரதர் இல்லீங்க இப்பத்தான் ஒரு மணி நேரம் முன் பழக்கம்'' என்று பேராசிரியை கூற, செல்போன் கொடுத்தவர் பதறிப் போனார். பேராசிரியை நடந்ததைக் கூற, செல்போனைப் பறிகொடுத்தவர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
உடனடியாக வெளியில் சென்று பார்க்க செல்போனுடன் அந்த நபர் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து பேராசிரியையிடம் அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு போன் செய்யுங்கள் எனக்கேட்க, போன் செய்தபோது அது சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. உடனடியாக இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்க போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செல்போனைப் பறிகொடுத்த நபர் முகப்பேரைச் சேர்ந்த டாக்டர் விக்னேஷ்வரன் என்பதும், ஒரு லட்சம் மதிப்புள்ள செல்போனை விற்பதற்காக கடந்த மாதம் 22-ம் தேதி ஓஎல்எக்ஸில் விளம்பரப்படுத்தியபோது, தான் ஒரு ஐடி பொறியாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மேற்படி நபர் பேசி தனியார் உணவு விடுதிக்கு வரச்சொல்லி, அங்கு தனது சகோதரியுடன் அமர்ந்துள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்கி செல்போனைத் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
டாக்டர் விக்னேஷ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்தபோது அதில் பதிவான நபரை டாக்டரும், பேராசிரியையும் அடையாளம் காட்டினர்.
அதைவைத்து போலீஸார் தொடர்ச்சியாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் சம்பந்தப்பட்ட நபர் மேடவாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. செல்போன் சிக்னலை வைத்து எளிதாக போலீஸார் அந்த நபரைப் பிடித்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (29) எனத் தெரியவந்தது.
ஹரி பிரசாத் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் மேடவாக்கம் காவல் நிலையத்தில் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சிம் கார்டை மாற்றியதால் சிக்கமாட்டேன் என்று நினைத்ததாக ஹரி பிரசாத் போலீஸாரிடம் கூறியுள்ளார். மூன்றாவது கண் என்று ஒன்று உள்ளது தெரியுமா என போலீஸார் சிசிடிவி குறித்துக் கூறியுள்ளனர். பின்னர் கைதான இளைஞர் ஹரி பிரசாத்திடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆன்லைனில் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்கும் நபர்கள், மோசடிப் பேர்வழிகளிடம் உஷாராக இருக்கும்படி போலீஸார் எச்சரித்துள்ளனர்.