திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த வயதான தம்பதியிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் கூறினார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், "நெல்லை மாவட்டம் கடையத்தில் வயதான தம்பதியிடம் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) கீழக்கடையம் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த பெருமாள், பாலமுருகன் ஆகிய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 35 கிராம் தங்க நகைகளும், ஏர் கன் ஒன்றும், அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், தம்பதியின் வீட்டினை 2 நாட்களாக நோட்டமிட்ட பின்னரே அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கொள்ளையர்கள் கூறினார்" என்றார்.
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சம்பவம் நடந்த நிலையில் கிட்டத்தட்ட ஐம்பது நாட்களுக்குப் பின்னர் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். கைதான பாலமுருகன், பெருமாள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் வசிப்பவர் சண்முகவேல், இவரது மனைவி செந்தாமரை. இவர்கள், தங்கள் சொந்த ஊரின் தோட்டத்து வீட்டில் தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இரண்டு முகமூடி கொள்ளையர்கள் புகுந்து தம்பதியை மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்டனர். ஆனால், தம்பதியின் துணிச்சலால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து வயதான தம்பதிக்கு பாராட்டு குவிந்தது. அவர்களுக்கு வீரதீர செயலுக்கான தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.