வட மாநிலத்தவர்கள் பிடிபட்ட தனியார் தங்கும் விடுதி 
க்ரைம்

புதுக்கோட்டையில் தனியார் தங்கும் விடுதியில் பிடிபட்ட வடமாநில இளைஞர்களுக்கு திருச்சி நகைக் கடை கொள்ளையில் தொடர்பா?

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தனியார் தங்கும் விடுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருச்சி போலீஸார் நேற்று நள்ளிரவில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் பிரபல நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடையின் சிசிடிவி காட்சியில், முகமூடி அணிந்த இருவர் நகைகளைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், திருச்சியில் இருந்து நேற்று (அக்.2) நள்ளிரவு வந்த போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை சுற்றி வளைத்து விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். போலீஸாரைக் கண்டதும் அவர்களோடு இருந்த ஒரு நபர் அங்கிருந்து ஓடி குதித்துள்ளார். இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டதால் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவர்களின் நடவடிக்கை போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் இவர்களுக்கும் திருச்சி நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஒருவேளை இந்தச் சம்பவத்தில் தொடர்பு இல்லாவிட்டாலும் வேறு ஏதோ குற்றச்செயலில் இவர்கள் சிக்கி இருக்கக்கூடும் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை தவிர மற்ற 5 பேரையும் திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதியை சுற்றியுள்ள கடைகளை போலீஸார் நேற்று இரவு அடைக்கச் செய்தனர்.

சுரேஷ்

SCROLL FOR NEXT