சென்னை,
பட உரிமை தருவதாக 21 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு படமும் தராமல் வாங்கிய பணத்தையும் தராமல் கேட்டால் மிரட்டுவதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடபழனி ஆற்காடு சாலையில் வசிப்பவர் மணிமாறன், அவர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார் ஒன்றை தனது வெளி நாடுவாழ் நண்பர் பிரம்மானந்தம் சுப்ரமணியம் சார்பாக அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
“எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்த 'டிராபிக் ராமசாமி' படத்தின் தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை 'பிரமானந்தம் சுப்ரமணியம்'(NRI) அவர்களுக்குக் கொடுப்பதாக கூறி ரூ.21 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டார். சில நாட்களுக்கு பின்பு தானே வெளியிட்டு கொள்வதாக கூறி 'பிரமானந்தம் சுப்பிரமணியம்' கொடுத்த ரூ,21,லட்சத்தை படம் வெளியீட்டுக்கு பின்பு கொடுத்துவிடுவதாக கூறியிருந்தார்.
ஒன்றரை வருடங்கள் கடந்தும் பணத்தை கொடுக்கவில்லை. இது சம்மந்தமாக பிரம்மானந்தம் அவர்கள் தொலைபேசி மூலமாக என்னிடம் பேசி எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை நேரில் சந்தித்து பணத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டார்.
நான் அவரை பல முயற்சிக்கு அப்புறம் நேரில் சந்தித்து பேசிய போது மூன்று மாதம் காலக்கெடுவில் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். இது சம்மந்தமாக கடந்த 26.09.2019 அன்று ஏஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன்.
‘வெளிநாட்டில் இருப்பவனை அங்கேயே இருக்க சொல்லு, இங்கு வந்தால் திரும்ப போக முடியாது. 'மணிமாறன்' ஆகிய உனக்கு ஏன் இந்த வெட்டி வேலை உனக்கு ஏதாவது வேண்டும் என்றால் வாங்கிக் கொள் என்னை பற்றியும் எனது மகன் விஜய் பற்றியும் உங்களுக்கு தெரியாததா?
அரசாங்கத்தையே அலறவைப்பவர்கள் நாங்கள் என உனக்கு தெரியாதா? வேண்டுமென்றால் கொஞ்சம் பணம் மட்டும் தருவேன் என கூறியதோடு எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு நீங்களும் பிரம்மானந்தத்தையும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் ’என்று கூறி இதுதான் இறுதி எச்சரிக்கை என்று கூறி சென்றுவிட்டார்.
மேற்படி இந்த நபரின் செய்கை மற்றும் மோசடி எங்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துகிறது. உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரைப்பெற்ற காவல் ஆணையரக அலுவலக அதிகாரிகள் புகாரை சம்பந்தப்பட்ட காவல் எல்லை உயர் அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்புவார்கள் என தெரிகிறது.