க்ரைம்

அதிமுக பிரமுகர் ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜர்: பேனர் வைத்தது தவறுதான் என ஒப்புதல்

செய்திப்பிரிவு

சென்னை

பேனர் விழுந்து விபத்தில் சிக்கி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 11-ம் தேதி சிறையிலடைக்க உத்தரவு.

கடந்த 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது அலட்சியமாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்கிற விபத்துப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு போலீஸார் தேடினர்.
ஆனால் அவர் தலைமறைவானார்.

இதுகுறித்து உயர் நீதிமன்றம் அவர் வெளிநாட்டுக்கா தப்பிச் சென்றார் என கேள்வி எழுப்பியது. அவர் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்து தனிப்படை அமைத்து தேடி வருவதாக தெரிவித்தனர். இந்த வழக்கை கையிலெடுத்த உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கியக் குற்றவாளியான ஜெயகோபால் மட்டும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தார்.

போலீஸாருக்கு போக்கு காட்டி வந்த கவுன்சிலர் ஜெயகோபால் நேற்று மாலை கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் ஜெயகோபாலைக் கைது செய்தனர். உடனடியாக அவரை தனிப்படை போலீஸார் சென்னை அழைத்து வந்தனர்.

சென்னையில் அவர் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இன்று காலை ஜெயகோபாலை ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் ஸ்கார்லி முன் ஆஜர்படுத்தினர்.

ஜெயகோபால் மீது ஐபிசி பிரிவு 279 (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவது, வாகனத்தை இயக்குவது) 337( உயிருக்கு (அ) தனி நபருடைய பாதுகாப்பிற்கு ஒரு செயலால் காயம் ஏற்படுத்துதல்) 304(ஏ)(அஜாக்கிரதையாக இருந்து மரணம் ஏற்பட காரணமாக இருத்தல்), 338 (உயிருக்கு அல்லது தனி நபருடைய பாதுகாப்பிற்கு ஒரு செயலால் கொடுங்காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயகோபால் மைத்துனரும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளார் அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயகோபாலிடம் நீதிமன்ற நடுவர், சட்டவிரோதமாக பேனர் வைத்து இளம்பெண் உயிரிழக்க காரணமாக இருந்தீர்கள் என்று உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேட்டபோது பேனர் வைத்தது தவறுதான் என ஜெயகோபால் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வரும் அக்டோபர் 11 வரை ஜெயகோபாலை சிறையிலடைக்க நீதிமன்ற நடுவர் ஸ்கார்லி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயகோபால் புழல் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

SCROLL FOR NEXT