கிருஷ்ணகிரி
பேனர் விழுந்து விபத்தில் சிக்கி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது அலட்சியமாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்கிற விபத்துப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு போலீஸார் தேடினர்.
ஆனால் அவர் தலைமறைவானார். இதுகுறித்து உயர் நீதிமன்றம் அவர் வெளிநாட்டுக்கா தப்பிச் சென்றார் என கேள்வி எழுப்பியது. அவர் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்து தனிப்படை அமைத்து தேடி வருவதாக தெரிவித்தனர். இந்த வழக்கை கையிலெடுத்த உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
"அரசு அதிகாரிகள், மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எவ்வளவு ரத்தம் தான் உங்களுக்குத் தேவைப்படும்? எந்தவொரு உத்தரவையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் கடமையைச் செய்யத் தவறியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பறிபோயிருக்காது. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தது.
இந்நிலையில் பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கியக் குற்றவாளியான ஜெயகோபால் மட்டும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் போலீஸாருக்கு போக்கு காட்டி வந்த கவுன்சிலர் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் ஜெயகோபாலைக் கைது செய்தனர். உடனடியாக அவரை தனிப்படை போலீஸார் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
304(2) பிரிவுப்படி ஜாமீன் எளிதில் கிடைக்காது. இதில் தலைமறைவாகி 15 நாட்கள் கழித்து பிடிபட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் அவ்வளவு எளிதில் கிடைக்க வாய்ப்பில்லை.