க்ரைம்

பெரியகுளம் அருகே தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் கவிழ்ந்து 3 பேர் மரணம்

என்.கணேஷ்ராஜ்

தேவதானப்பட்டி

பெரியகுளம் அருகே தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் 3 பேர் இறந்தனர். 14 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேவதானப்பட்டி மஞ்சளாறு அணைப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கும்பக்கரையில் உள்ள தென்னந்தோப்பில் வேலை செய்ய ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். வண்டியில் உர மூடைகளை ஏற்றிக் கொண்டு அதன்மேல் இவர்கள் அமர்ந்திருந்தனர்.

ஜீப்பை செல்லப்பாண்டி(28) என்பவர் ஓட்டிக் கொண்டிருந்தார்.

பெரியகுளம் வத்தலக்குண்டு ரோடு தண்ணீர்பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி வேன் கவிழ்ந்தது.

இதில் மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி(27), மணி(27) ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்தனர். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அய்யர்(45) என்பவர் இறந்தார்.

காயம்பட்ட செல்வம், முருகேசன், மணிகண்டன், அருண்பாண்டி, மயில்சா உள்ளிட்ட 14பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேவதானப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் குருவெங்கட்ராஜ் விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT