வாணியம்பாடி
வாணியம்பாடியில் பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இந்திரா நகர், காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (34). இவருக்கு 2 முறை திருமணமாகி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்களைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (35) என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், குழந்தை மற்றும் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் சத்யா சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் வீடு திரும்புவாரா? இல்லையா? எனத் தெரியாமல் தவித்த சத்யா தன் குழந்தையை யாருக்காவது கொடுத்து விடலாம் என எண்ணினார். இது குறித்து தன் அக்கா சீதா (38), பக்கத்து வீட்டைச் சேர்ந்த கவிதா (38) ஆகியோரிடம் ஆலோசனை கேட்டதாகத் தெரிகிறது.
அப்போது, "குழந்தையில்லாமல் கஷ்டப்படும் நிறைய பேர் எனக்குத் தெரியும். அவர்களிடம் குழந்தையைக் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். குழந்தையை நல்ல முறையில் அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்" என கவிதா யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்ற குழந்தையை விற்க சத்யா முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜெய்நகரைச் சேர்ந்த ரஹ்மத் - ஷகிலா தம்பதிக்கு குழந்தையை விற்க பேரம் பேசப்பட்டது. அதன்படி ரூ.1 லட்சத்துக்கு சத்யா தன் குழந்தையைக் கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூரு தம்பதிக்கு விற்றார். இதற்காக ரூ.65 ஆயிரத்தை அவர் முன்பணமாகப் பெற்றார். பாக்கித் தொகையை இம்மாதம் இறுதிக்குள் பெங்களூரு தம்பதி வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து திடீரென முருகன் வீடு திரும்பினார். வீட்டில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன், தன் மனைவியிடம் குழந்தை எங்கே எனக் கேட்டார். அதற்கு சத்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்தார். சத்யா பதிலில் முருகனுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சத்யாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் குழந்தையை விற்ற விவரம் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, தாலுகா காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான காவல் துறையினர் பெங்களூருக்கு சென்று இன்று (செப்.24) காலை குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சத்யா, சீதா, கவிதா, ரஹ்மத் மற்றும் ஷகிலா ஆகிய 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துக்காக பெற்ற குழந்தையை விற்பனை செய்த சம்பவம் வாணியம்பாடியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.