சென்னை
துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை குருவியாக செயல்பட்ட நபரே பதுக்கி வைத்துக் கொண்டதாகக் கூறி, அவரை கடத்தி தாக்கிய 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் முனாசீர்அலி. இவர் சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து விற்பனை செய் யும் கடத்தல் தொழில் செய்து வருகிறார். இதற் காக சிலரை குருவிகளாக பயன்படுத்தி யுள்ளார். (வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கிருந்து தங்கம் மற்றும் போதைப்பொருட்களை கடத்தி வருபவர்களை ‘குருவிகள்’ என்று சொல்வார்கள்).
இதன்படி, ராமநாதபுரம் பனக்குளத்தைச் சேர்ந்த முகமதுநஜீ, சென்னை மண்ணடியைச் சேர்ந்த முல்தகுசீம் ஆகியோரை தங்கம் கடத்தி வர ‘குருவி’களாக கடந்த 11-ம் தேதி துபாய்க்கு அனுப்பியிருக்கிறார். இருவரும் அங்கு 700 கிராம் தங்கக் கட்டிகளை தலா 350 கிராம் வீதம் தங்களது ஆசனவாயில் வைத்து சென்னைக்கு கடத்தி வந்துவிட்டனர்.
ஆனால், தாங்கள் கடத்தி வந்த தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துவிட்டதாக முகமதுநஜீ தெரிவித்துள்ளார். இதனை நம்பாத முனாசீர்அலி, தன்னை ஏமாற்றுவதாகக் கூறி தங்கத்தை தருமாறு கேட்டிருக்கிறார். பின்னர் இதுபற்றி தனது நண்பரான உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பூபதியிடம் கூறியிருக்கிறார். பின்னர் பூபதியும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து முகமதுநஜீயை கடத்தி, மண்ணடியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து தங்கத்தை கொடுக்குமாறு அடித்து சித்ரவதை செய்துள்ளனர். பிறகு திருவல்லிக்கேணியில் விடுதி ஒன்றில் அடைத்துவைத்து தாக்கியதாகவும் கூறப்படு கிறது. தங்கக் கட்டிகள் அல்லது அதற்கு ஈடாக ரூ.5 லட்சம் தருமாறு தாக்கியவர்கள் முகமதுநஜீயை மீண்டும் மண்ணடி அறையிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் வடக்கு கடற்கரை போலீஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து முகமது நஜீயை மீட்ட போலீஸார், அங்கிருந்த முனாசீர் அலி, பூபதி, கடத்தலில் ஈடுபட்ட பெரம்பூர் ராஜாராம், மண்ணடி சிராஜுதீன், ராயபுரம் தியாகராஜன், திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.