வினிதா (இடது), அபி (வலது) 
க்ரைம்

'டிக் டாக்' செயலியில் திருவாரூர் பெண்ணுடன் நட்பு: 45 பவுன் நகைகளுடன் சிவகங்கை பெண் மாயம்- கணவர், தாயார் புகார்

இ.ஜெகநாதன்

தேவகோட்டை

‘டிக்டாக்’ செயலி மூலம் திருவாரூர் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு 45 பவுன் நகைகளுடன் மாயமான சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலைச் சேர்ந்த இளம்பெண் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தேவகோட்டை அருகே கடம்பாகுடியைச் சேர்ந்த வினிதாவிற்கும், சானா ஊரணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோவிற்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது. இருவரும் காளையார்கோவிலில் வசித்து வந்தனர்.

மார்ச்சில் ஆரோக்கிய லியோ சிங்கப்பூர் சென்றுவிட்டார். அதன்பின் வினிதா ‘டிக் டாக்’ செயலியில் மூழ்கியுள்ளார். இதன்மூலம் திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த ஆரோக்கிய லியோ தனது மனைவியை போனில் கண்டித்துள்ளார். ஆனால் கண்டுகொள்ளாத வினிதா, தனது கையில் அபியின் படத்தை ‘டாட்டூ’ வரைந்துள்ளார். இதை வீடியோ காலில் பார்த்த ஆரோக்கிய லியோ, வினிதாவிடம் கூறாமலேயே ஊருக்கு வந்தார்.

வினிதாவிடம் விசாரித்தபோது 20 பவுன் நகைகள், ஆரோக்கிய லியோ அனுப்பிய பணம் என அனைத்தையும் அபியிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து வினிதாவின் தாயார் அருள்ஜெயராணியிடம் ஆரோக்கிய லியோ தெரிவித்துள்ளார். மேலும் வினிதாவையும் அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினிதா அவருடைய அக்கா புனிதாவின் 25 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வினிதாவின் தாயாரும், கணவர் ஆரோக்கிய லியோவும் திருவேகம்பத்தூர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT