சென்னை
தாய்லாந்து தலைநகர் பாங்காக் கில் இருந்து நேற்று சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சலீம் (40) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த னர். அதில், ரூ.39 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சலீமை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி தங்கக் கட்டிகளை வாங்குவதற்காக விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதே விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த அஷ்ரப் அலி (59), அவரது மனைவி சைரா பானு (50), மகன் முகமது (23) ஆகியோரின் நடவடிக்கைகளிலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர்கள் உள்ளாடைக்குள் ரூ.97 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத் திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கணவன், மனைவியை கைது செய்தனர்.
இதேபோல அபுதாபியில் இருந்து வந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சைதாலவி குன்னத்தோடி (51) என்பவர் கொண்டு வந்த மோட்டார் பம்ப்பை அதிகாரிகள் உடைத்துப் பார்த்தபோது, அதில் ரூ.64 லட்சம் மதிப்புள்ள 1.64 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.