சென்னை
அண்ணா சாலை எல்.ஐ.சி அருகே வங்கியின் விளம்பர போர்டு வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் ஸ்லாப் திடீரென இடிந்து சாலையில் விழுந்தது. நல்வாய்ப்பாக சாலையில் செல்லும் யார் மீதும் விழாததால் பொதுமக்கள் பாதிப்பில்லாமல் தப்பித்தனர்.
சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. அருகே இரண்டு தளம் மற்றும் மேல்தளத்துடன் கூடிய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் ஆந்திரா வங்கி ஏடிஎம் உள்ளது. முதல் தளத்தில் ஆந்திரா வங்கியும், இரண்டாம் தளத்தில் தனியார் ஏஜென்சி ஒன்றும் செயல்படுகிறது.
மெட்ரோ பணிகள் முடிந்து அண்ணா சாலை இருவழிச் சாலையாகத் திறக்கப்பட்டு சில நாட்களே ஆனதால் இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள மற்ற கடைகள் எதுவும் இயங்காததால் வங்கி மட்டுமே இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் இந்தக் கட்டிடத்தில் வங்கியின் விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் ஸ்லாப் திடீரென இடிந்து சாலையில் விழுந்தது. சுமார் 20 அடி நீள விளம்பர போர்டும் அதனுடன் சேர்ந்து சாலையில் விழுந்தது. இடிந்து விழுந்த கான்கிரீட் ஸ்லாப் வெகுகாலமாக மோசமான நிலையில் இருந்துள்ளது.
ஸ்லாப் இடிந்து விழும் நிலையில் இருந்தும் அதுகுறித்து வங்கி நிர்வாகமோ, தனியார் ஏஜென்சியோ நடவடிக்கை எடுத்து மராமத்துப் பார்க்காமல் விட்டுவைத்துள்ளனர். இதனால் விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த ஸ்லாப் சுமார் 20 அடி தூரத்துக்குப் பெயர்ந்து சாலையில் விழுந்தது.
மெட்ரோ பணி காரணமாகவும் வங்கிக்கு வாடிக்கையாளர் வரத்து குறைவு என்பதாலும் ஸ்லாப் இடிந்து சாலையில் விழும்போது நல்வாய்ப்பாக சாலையில் யாரும் நடந்து செல்லவில்லை. இதனால் மிகப்பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. ஆனால் ஸ்லாப்பும், விளம்பர போர்டும் விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் சேதமடைந்தன.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையின் அதி நவீன ஏணியுடன் கூடிய வாகனம் உள்ளிட்ட 4 வாகன்ங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீஸ் அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அண்ணா சாலையில் பலத்த சத்தத்துடன் ஸ்லாப் இடிந்து விழுந்தது வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.