பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே வீட்டுக்குச் செல்லும் பாதையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின்மோட்டார் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாமியார், மருமகள் இருவரும் தீக்குளித்தனர். இதில் மாமியார் உயிரிழந்தார். மருமகள் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அல்லிநகரம் ஊராட்சியைச் சேர்ந்த மேல உசேன் நகரம் கிராமத்தில் சீமான் எனும் குளம் உள்ளது. இந்தக் குளத்தின் ஒரு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி, மேல மற்றும் கீழ உசேன் நகரங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
மின்மோட்டார் அறையின் அருகில் ராமதாஸ் மனைவி பூங்கொடி (56) என்பவர் வீடு கட்டி வசித்து வந்தார். அவர், மின்மோட்டார் அறை தனது வீட்டுக்குச் செல்லும் பாதையில் உள்ளது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், பூங்கொடியின் வீட்டுக்குப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியதாகவும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அல்லிநகரம் ஊராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால், அல்லிநகரம் ஊராட்சி சார்பில் அதனருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து அதற்கு மின்மோட்டார் பொருத்தும் பணி சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அல்லிநகரம் ஊராட்சி செயலாளர் கலையரசி உள்ளிட்ட ஊராட்சிப் பணியாளர்கள் நேற்று முன்தினம் மாலை மின்மோட்டார் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தனது வீட்டுக்குச் செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூங்கொடி, அவரது மருமகள் தங்கலட்சுமி (33) ஆகியோர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மின் மோட்டார் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இதனால் விரக்தியடைந்த பூங்கொடியும், தங்கலட்சுமியும் இன்று (செப்.23) திடீரென்று வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். உடல் முழுவதும் தீ பரவியதால் இருவரும் வலியால் அலறினர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் பூங்கொடி, தங்கலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பூங்கொடி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தங்கலட்சுமி சார்பாக, பூங்கொடி தற்கொலைக்குக் காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் கலையரசி, முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன், டேங்க் ஆபரேட்டர் சுப்ரமணி, எலக்ட்ரீசியன் சுப்ரமணியன் உள்ளிட்ட 12 மீது போலீஸார் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.