ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள கிருஷ்ணாநகரில் வசித்து வரும் ஜெயபால் 65. இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் பிரதீப் சென்னையில் பணி புரிகிறார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையைப் பாராமரிப்பதற்காக ஜெயபாலும் அவரது மனைவி ஜோதியும் கடந்த 5 மாதங்களாக சென்னையில் மகன் வீட்டில் தங்கியிருக்கின்றனர். அவ்வப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று (செப்.21) காலை 8 மணியளவில், ஜெயபால் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் சிலர் அவருடைய வீட்டின் கதவுகள் திறந்திருந்ததைக் கவனித்துள்ளனர்.
சந்தேகம் எழுந்ததால் வீட்டின் வெளியே இருந்து சத்தம் கொடுத்துள்ளனர். உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால் சற்று கூர்ந்து கவனிதபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னையில் வசித்து வரும், ஜெயபால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது.
இதன் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி, ராஜேந்திரன் நகர் இன்ஸ்பெக்டர் ஏசுதாஸ், க்ரைம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை போன வீட்டை பார்வையிட்டு அருகில் விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவம் நடந்த வீடு அமைந்துள்ள கிருஷ்ணாநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி தேசிய நெடுஞ்சாலையின் முன் பகுதியில் அமைந்துள்ளது. அருகருகே வீடுகள் இல்லாத நிலையில் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
போலீஸார் விசாரணையில் 40 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் முக்கிய தடயங்களை விட்டுச் சென்றார்களா? என்பது குறித்து தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே தெரியவரும்" எனத் தெரிவித்தார்.