திருப்பூர்
முகம் தெரியாத பெண்களுக்கு அவர்களது ஆபாச வீடியோவை வைத்திருப்பதாகக் கூறி, வாட்ஸ்-அப் மூலமாக மிரட்டல் விடுத்த இளைஞரை திருப்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் அலைபேசி வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அந்த பெண்ணின் ஆபாச படத்தை வைத்திருப்பதாகவும், ரூ.5 லட்சம் தர வேண்டும் எனவும், இல்லையெனில் இணையதளத்தில் பகிர்ந்துவிடு வேன் எனவும் மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.
இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண் அளித்த புகாரின்பேரில், உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில், துணை ஆணையர் இ.எஸ்.உமா மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, சேலத்தை சேர்ந்த நரேஷ் (27) என்பவரை நேற்று பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘ஐ.டி.ஐ. படித்த அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்துக்காக பணம் சேர்க்க வேண்டி, திருப்பூர், சேலத்தை சேர்ந்த இரு பெண்களின் தொடர்பு எண்களை முகநூலில் இருந்து எடுத்து, நூதனமாக பணம் கேட்டு மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், அவரிடம் அதுபோன்று எந்த ஆபாச படங்களும் இல்லை. விசாரணைக்குப் பிறகு, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்' என்றனர்.