சென்னை துறைமுகத்தில் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய இந்திய கப்பல் படை வீரர், பந்து நெஞ்சில் பட்டதில் உயிரிழந்தார்.
சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பலான (Car Nicobar) நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. போர்க்கப்பலான அதில் உள்ள வீரர்கள் கப்பல் கரையில் நிறுத்தப்பட்டதால் ஓய்வு நேரத்தை ஜாலியாக கழிப்பதுண்டு. சிலர் ஷாப்பிங் செல்வார்கள், சிலர் உள்ளேயே வேறு ஏதும் விளையாட்டு விளையாடுவார்கள், சிலர் ஊர்சுற்றிப்பார்க்க்க கிளம்புவார்கள்.
இந்நிலையில் கப்பலில் பணியாற்றும் வீரர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோகேந்தர் சிங்(24), விவேக்(26), கமல்(21), விஷ்வா குமார்(22) மற்றும் அங்கிருந்த சிலருடன் சேர்ந்து துறைமுகம் 5-வது கேட் அருகில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
ஜோகேந்தர் சிங் பேட்டிங் செய்துள்ளார் அப்போது விவேக் அவருக்கு பந்து வீசியதாக கூறப்படுகிறது. விவேக் வீசிய பந்து தரையில் பட்டு எழும்பி பேட்டிங் செய்த ஜோகிந்தர் சிங் நெஞ்சில் பட்டுள்ளது. இதில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்து மயக்கமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சக வீரர்கள் முதலுதவி செய்து ஐஎன்எஸ் அடையார் நேவி மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருந்துமனைக்கு மாலை 5 மணிக்கு அனுப்பி வைக்கபட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கிரிக்கெட் விளையாட்டில் 24 வயதே ஆன வீரர் உயிரிழந்தது சக வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன ஜோகிந்தர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு கடந்த மே மாதம்தான் திருமணம் நடந்தது. திருமணமாகி 4 மாதத்தில் அவர் உயிரிழந்துள்ளார். 2013 ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இந்த விபத்து குறித்து கப்பலின் லெப்டினெண்ட் கர்னல் ரஜத் ரானா புகாரின்பேரில் துறைமுகம் போலீஸார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜோகிந்தருக்கு பந்து வீசிய விவேக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தினர், சாதாரணமாக போலிங் செய்தேன், அது பவுன்ஸ் ஆகி அவரிடம் சென்றது. அவர் அடிக்க முயன்றபோது அவர் மார்பில் பட்டது என தெரிவித்துள்ளார். சாதாரண ரப்பர் பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஆனாலும் பந்து பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்துக்கான காரணம் தெரியவரும்.