க்ரைம்

சென்னையில் தொடர் மழை: மண்ணடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் மண்ணடியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் ஒரே இரவில் 21 சென்டி மீட்டர் மழையும், சென்னையில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர் மழை பதிவானது.

கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில்

சென்னை மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் வசித்தவர் நவாஸ்கான்(55) இவரது மனைவி ஜெரினா பேகம்(50). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். நவாஸ்கான் சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்துவிட்டார். தனது இரு பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து ஜெரினா பிழைத்து வந்தார்.

நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக அதிகாலை 4 மணி அளவில், அப்போது வீட்டின் ஒருபக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி ஜெரினா பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன், மகள் காயமின்றி தப்பித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெரினா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

SCROLL FOR NEXT