தேனி
தேனி மருத்துவக் கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் வடமாநிலத்தில் நீட் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால் தேனி மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கனாவிலக்கில் உள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இக்கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தேனி மருத்துவக் கல்லூரியில் ஆண்டிற்கு 100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த 100 மாணவ மாணவிகளில் ஒருவரான, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகனே தற்போது இந்த பரபரப்புக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்.
இவர் நீட் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் செய்யதாகவும், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் உள்ள படமும், மாணவனின் படமும் வேறு வேறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவர் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை தெரியவில்லை..
இதற்கிடையில், இந்தப் பரபரப்பு புகார் தொடர்பாக தேனி மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் விசாரித்த போது, "சம்பந்தப்பட்ட மாணவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர். இந்த ஆண்டு வெற்றிபெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தேர்வானார்.
சில நாட்களாகவே அவர் கல்லூரிக்கு வருவதில்லை. அது ஏன் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியுள்ளதாகக் கூறுகின்றனர். அவர் தேர்வு எழுதியது மகாராஷ்டிராவில் என்பதால் எளிதாக ஆள்மாறாட்டம் செய்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். உண்மை என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை" என்றனர்.
சமூக ஆர்வலர்கள் கண்டனம்:
தமிழகம் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் நீட் தேர்வில் வட மாநிலத்தில் தேர்வு எழுதி ஆள்மாறாட்டம் செய்த புகார் குறித்து தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவிகளைச் சோதனை என்ற பெயரில் அத்துமீறி நடத்துகின்றனர். ஆனால் இதுபோன்ற ஆள்மாறாட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்போல. வட மாநிலத்தில் தேர்வு எழுதினால், ஆள் மாறாட்டம் எளிதில் செய்யலாம் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது" என சமூக ஆர்வலர்கள் தங்களின் கண்டனக் குரலை எழுப்பியுள்ளனர்.