க்ரைம்

பணியின்போது மது போதையில் இருந்த காவல் ஆய்வாளர்: துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

நெல்லையில், பணியின்போது மது போதையில் இருந்த காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (30). இவர், அப்பகுதியில் பாத்திரக் கடை வைத்துள்ளார். நேற்று மாலையில் வீரவநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 பேர் கும்பல், மாரியப்பனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். மேலும், எஸ்பி உத்தரவின்பேரில், சேரன்மகாதேவி காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் விசாரணை நடத்த சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அவர், மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜாராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதில், காவல் ஆய்வாளர் ராஜாராம் மதுபானம் அருந்தியிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT