சென்னை
முகலிவாக்கத்தில் மாநகராட்சியினர் தோண்டிய பள்ளம் மூடப்படாத நிலையில் தேங்கிய மழைநீரில் உள்ளே இருந்த மின்சார கேபிளில் கசிந்த மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை போரூரை அடுத்துள்ள முகலிவாக்கம் சுபஸ்ரீ நகர் நாலாவது விரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில்(40) இவரது மனைவி வனிதா (35) இவர்களுக்கு தீனா(14) உட்பட 2 மகன்கள் உள்ளனர். செந்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். பெரிய மகன் தீனா எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
தீனா வசிக்கும் வீட்டுக்கு பின்புறம் உள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன்பாக சென்னை மாநகராட்சி பணிக்காக பள்ளம் தோண்டி உள்ளனர். அந்தப்பணி இன்னும் முடிவடையாத நிலையில் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர்.
தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்சார கேபிள் வெளியே வந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்தப்பள்ளம் மழைநீரால் நிரம்பி சாலையில் நீர் தேங்கியிருந்துள்ளது. பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் பள்ளத்தில் உள்ளே இருந்த மின்சார கேபிளால் மின்கசிவு ஏற்பட்டு நீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் தீனா, நேற்றிரவு 10 மணி அளவில் தனது தந்தையின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அந்த வழியாக வாகனத்தை தள்ளிச் சென்றுள்ளார். தண்ணீர் தேங்கிய இடத்தில் தரை மேல் செல்லும் மின்சார வயரை தெரியாமல் அதன்மீது காலை வைத்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கியதில் தண்ணீரிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளித்து மின் இணைப்பை துண்டித்துவிட்டு தீனாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்து போனது தெரியவந்தது.
சாலையில் தோண்டிய பள்ளத்தை மூடாததும், மின்சார வயர் வெளியே கிடக்கும் அளவுக்கு அலட்சியமாக இருந்த இரண்டுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே தீனாவின் மரணத்துக்கு காரணம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து தீனாவின் உடலோடு போரூர்-கிண்டி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மாங்காடு போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கலைந்துப்போகச் செய்தனர். தீனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தப்பிரச்சினையால் ஒருமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழைக்காலம் வருவதால் மின்சார இணைப்புப் பெட்டிகள், தோண்டப்பட்ட பள்ளங்கள், சாலையோர மின்கம்பங்களில் மின் கசிவு ஏற்படாமல் பார்க்கவும், தோண்டப்பட்ட பள்ளங்களை மூடவும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.